Thursday 19 June 2014

உயிர்


உயிர்

'கடவுள்' - இதைப் பற்றிய உங்கள் கருத்து... என் நண்பர் கேட்ட கேள்வி இது. அவர் எனக்கு தெரிந்த நாளில் இருந்தே நாத்திகவாதிதான். இந்த ஒற்றை வார்த்தைக்கு எப்படி பதில் சொல்லி நிறைவு செய்துவிட முடியும். இயற்கை என்பதே கடவுள் என்று சொல்லி அந்த கணத்தை நிரப்ப முடியாமல் நிரப்பிவிட்டேன். நிரப்பிவிட்டதாக நம்பினேன் என்பதே சரியாக இருக்கும். ஆனால் இந்த பதிலில் எனக்கே உடன்பாடில்லைதான். இயற்கை மட்டும்தான் கடவுளா என்கிற கேள்வி நாள் முழுவதும் என்னை தொந்தரவு செய்தபடியே தொடர்ந்தது. மாலை எனது வீட்டின் மேல்தளத்தில் காற்று மிக மென்மையாக உடல் தழுவிக்கொண்டு இருந்தது, இப்போது இயற்கையை சென்னையின் வளர்ச்சி மங்கிப்போக செய்திருந்தாலும் என்னுடைய வீடு சென்னையின் ஒதுக்குபுறத்திலிருப்பது. அதனால் இயற்கை இன்னும்கூட சின்னச் சின்னதாக உயிர்ப்போடு இருந்தது அங்கு. "கடவுள்" என்கிற அந்தக் கேள்வியையே மீண்டும் மனம் கேட்க ஆரம்பித்தது. அப்போது என்னுடைய அந்த நினைவும் வெளிப்பட்டது.
ஆமாம்...  
வயது முப்பத்து ஐந்து இருந்திருக்க வேண்டும் அந்த மனிதருக்கு. ஒடிசலான உடல் என்று சொல்ல முடியாது ஆனால் மிகவும் தேற்றலான உடலும் இல்லை. நான் கிடத்தப்பட்ட படுக்கைக்கு பக்கத்தில்தான் அவருடைய படுக்கை. பார்ப்பதற்கு சிறிய உடல்நலக்கோளாறால் ஓய்வில் இருக்கும் நபரைப்போல் தோற்றமளித்தார் அவர். ஆனால் அப்போது எனக்கு தெரியாது அந்த பயங்கரம் இவருக்கு நடக்கவிருக்கிறது என்பது.

கடந்த சில மாதங்களில் ஏற்கெனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த என்னுடைய உடல் இந்த இருபத்து நான்கு வயதிலேயே இன்னும் சில தினங்கள் அல்லது நாழிகைகள் மட்டுமே என்கிற அளவிற்கு மிக மோசமடைந்ததை தொடர்ந்து இப்போது மாநகரின் பெருவெளியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளேன். உடலுக்குள் இன்னுமும் உயிர் இருக்கிறது என்பதை உணர்வதே சிரமமான வேலையாக இருந்தது என் தாய்க்கு. நடுத்தர மக்களுக்கு பணக்கார நோய்கள் வந்துவிட்டால் அவர்களின் நிலை இதுவாகத்தான் இருக்க முடியும். நல்ல மனிதர்களை சம்பாதிக்க முடிந்த என்னால் என் இதயத்தை சரிசெய்ய பொருளை சம்பாதிக்க முடியாமல் போயிருந்தது அப்போது. அதன் விளைவு இந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளேன்.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து மருத்துவமனைக்கு படையெடுத்த பின்பு அன்று நான் அவசரமாக அட்மிட் ஆக வேண்டும் என்று டாக்டர் வலியுருத்தினார். அம்மாவும் அண்ணனும் என்னோடு. டாக்டர் சொல்லிவிட்டாலும் மருத்துவமனை படுக்கைகள் இடம் தரவில்லை. அடுத்த இரண்டு நாட்களாக தரையில் கிடத்தப்பட்டு கிடந்தேன். காலையில்தான் அந்த பெட் காலியாகி இருப்பதை கண்ட என்னுடைய அண்ணன் அங்குள்ள நர்ஸ்களிடம் கேட்டுகொண்ட பிறகு (சண்டை போட்ட பிறகு) எனக்கு அந்த பெட் கொடுக்கப்பட்டது. அடுத்த சில மணி நேரத்திலெல்லாம் அம்மாவிற்கு அந்த உண்மை தெரியவந்தது. அந்த பெட்டிலிருந்த நபர் சில மணி நேரத்திற்கு முன்புதான் உயிரிழந்தார் என்று. அவர்கள் பிணத்தை எடுத்து சென்ற சில விநாடிகளில் தண்ணீரால் கழுவக்கூட இல்லாத அந்த பெட்டில் இப்போது என் உடல் கிடத்தி வைக்கப்பட்டு கிடந்தது. அரை உயிரில் நிகழும் நிஜங்களெல்லாம் ஒரு கனவுகள்போல எனக்கு தெரிகிறது. டாக்டர்கள் (அதாவது டாக்டருக்கு பயின்றவர்கள்) வந்து பார்ப்பதும் செல்வதுமாக அடுத்த இரண்டு நாட்கள் நீள்கிறது.

மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளை விட நோயாளிகளுக்கு துணையாக இருப்பவர்கள் நிலைமை வெகு மோசமானது. அவர்களின் ஒரே ஆறுதல் பக்கத்து பெட் நோயாளிகள் பற்றிய தகவல் பரிமாற்றங்களில்தான். தொடர்ந்தே இதயவலியின் உச்சத்தில் இருந்த எனக்கு இன்னும் சில மணி நேரங்களில் உயிர் பிரியும் என்கிற நிலைமை நீடித்திருந்தது. நானும்கூட எதிர்பார்த்திருந்தது அதைத்தான். வலியை பொருக்க முடியாத எனக்கு இறப்பு என்கிற ஆறுதல் தேவையான ஒன்றாக தோன்றியது.

அந்த மனிதர் என் அளவிற்கு உடல் மோசமான நிலையில் இல்லையென்றாலும் அவரும் இதய நோயின் தொடக்க கால நோயாளிதான் என்பது தெரியவந்தது. நன்றாக அவர் தன் மனைவியிடம் பேசிக்கொண்டு இருந்தார். ஆனால் நான்தான் என் அம்மாவை அதிகபட்சமான சிரமத்திற்கு உட்படுத்தி கொண்டிருந்தேன். வலியின் வேதனையில் உட்கார வைக்க சொல்வதும் அடுத்த சில கணங்களிலேயே படுக்க வைக்க சொல்வதுமாக இம்சித்துகொண்டிருந்தேன். இரவு மொத்தமும் இப்படித்தான் கழிந்தது. காலை ஐந்து மணி இருந்திருக்க வேண்டும். நேற்றைய பொழுது போலவே எனக்கு காபியை ஊட்டிக் கொண்டு இருந்தார் என் அம்மா. எப்போதும்போல இந்த தேநீரும் வாந்திதானே வரப்போகிறது என்கிற பயத்தில் பருகிய எனக்கு, அடுத்த விநாடியில் குடித்த கொஞ்சம் காபிகூட வாந்தியாக வெளிப்பட்டது. இதற்கு மேலும் உணவை எடுத்துகொள்கிற சக்தி எனக்கு இல்லை. இரவு நன்றாக உணவு எடுத்துகொண்ட பக்கத்து பெட் நபர் உறக்கம் கலைந்த நேரம் அப்போது. எழுந்தது முதல் இன்று ஏனோ தெரியவில்லை. அதிக சிரமத்திற்கு உட்பட்டார்.

வலி தாங்க முடியாத அதீத வலி அவரிடமிருந்து வெளிப்பட்டுகொண்டே இருந்தது. சற்றும் நான் இதனையெல்லாம் எதிர்பார்க்கவே இல்லை. நேற்றுவரை சில நேரங்களில் அவர் எனக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தார். ஆனால் காலை முதலே அவரின் சிரமம் என்னை மிகவும் வருத்தியது. அடுத்த சில நேரங்களில் ஏழு மணிக்கெல்லாம் பொதுவாகவே எந்த மருத்துவரும் இருப்பது கிடையாது. அங்கிருந்த பயிற்சியாளர்கள் மட்டும் வரவழைக்கப்பட்டு இருந்தார்கள். அவருடைய பெருத்த அலறல் ஏதோ நடக்கப் போகிறது என்கிற பயத்தை எனக்குள்ளாக அறிவித்தது. டாக்டர்கள் வந்த சில விநாடிகளில் அவர் துணியாலான இழுவை அறை கொண்டு அடைக்கப்பட்டார். இப்போது அவரின் அலறல் மிக அதிகமாக வெளிப்பட்டது. அடுத்தடுத்த விநாடிகளுக்குப் பிறகு அவரிடமிருந்து எந்த சலனமும் இல்லை. ஏதோ ஒன்று முடிவுக்கு வந்துவிட்டதுபோல தோன்றியது. வந்திருந்த நாக்டர்கள் அவருடைய இதயப் பகுதிக்கு மிக வேகமாக அழுத்தம் தர தொடங்கியிருந்தார்கள். ஆனால் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. திரைப்படங்களில் காண்பிப்பதுபோல எந்த இயற்கையை மீறிய செயலும் நடந்தேறவேயில்லை. ஆனால் நான் எதிர்ப்பார்த்தது அந்த இயற்கைக்கு மீறிய செயலைத்தான்.

என்னிலிருந்தது ஒப்பிட்டால் அவர் ஆரோக்கியத்தோடுதான் இருந்தார். ஆனால் இறைவன் கணக்கு அவரை அழைப்பதுபோல. அவருடைய ஆத்மாவிற்கு ஓய்வு கிடைத்திருந்தது. அடுத்த சில மணி நேரங்களில் நான் வேறு ஒரு பெட்டிற்கு இடம் மாற்றப்பட்டேன். இப்போது அவர் உடலைச் சுமந்த படுக்கை அடுத்த உடலை சுமக்க தயாராகிக் கொண்டிருந்தது. என்னைப் போல யாரோ ஒருவர் அந்த படுக்கைக்கு அனுமதிக்கபட்டு கிடந்தார். அடுத்தடுத்த நாட்களில் மெல்ல உடல் நலம் தேறியது எனக்கு. ஆனால் அவரைப் போன்ற பல பேரின் கண்ணீர் கதைகளை சுமந்துகொண்டுள்ள என் இதயம் இப்போது இயற்கை என்பது மட்டுமே கடவுள் என்பதை பலமாக நம்பியது.