Wednesday 24 August 2011

கலைகள் சொல்லும் கதைகள்

கலைகள் சொல்லும் கதைகள்

இரவுக்குதான் எத்தனையெத்தனை சக்திகள்... மனிதர்களை நிஜ உலகிலிருந்து நியமங்களும் எல்லைகளும் வரையறுக்காத உலகத்துக்கு இழுத்து சென்றுவிடுகிறது. ஆனால் அந்த ராப்பொழுதுதான் செல்வ கணபதிக்கு சக மனிதர்களிடமிருந்து தன்னை பிரித்துகொள்ளும் நிகழ்வாகி போயிருந்தது. பிறந்தது முதல் இன்றுவரை தன் வாழ்க்கையை செலுத்தும் சக்தியாக அவர் கற்ற தெருக்கூத்து கலையைத்தான் நினைத்திருந்தார்.


கூத்துக்களில் இவரின் கர்ணனின் வேடமும், கர்ண மகாராஜனை உள்வாங்கி வெளிப்படுத்தும் திறனும் இவரை ஊரின் பலராலும் கர்ணன் என்றே அழைக்கும்வண்ணம் செய்திருந்தது நிதர்சனமான உண்மைதான்.

இந்த ராப்பொழுதும் அவருக்கு கர்ணனாக அவதாரம் எடுக்கும் நேரம் வாய்த்திருந்தது. இரவு பத்தரையிலிருந்து பதினொன்றை நோக்கி நகர்ந்துகொண்டிந்தது. தெருக்கூத்தும் ஆரம்பமாகியிருந்தது. செல்வமும் கர்ணணுக்கான வேடத்தை அணிந்தபடி இருந்தபோது, அவர் மகன் அருணை பற்றியும் எண்ணாமல் இருக்க முடியவில்லை. தன் மகனை எப்படியும் ஓர் சிறந்த மனிதனாக்கி விடும் முயற்சியில், கடந்த 20 ஆண்டுகளையும் அவனுக்காவே செலவிட்டிருந்தார். இந்த வருடம் காலேஜ் முடிந்தால் அருண் ஒரு சிறந்த என்ஜீனியர். அருண் காலேஜ்  போனபின் அவனை சரிவர அவரால் காணகூட முடியாமல் போனது. தான் காணாத வேற்றுலகை தன் மகன் காண வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாய் இருந்தார் செல்வம்.

அருண் தன் தந்தையை கர்ணனான பார்த்தே பிரமித்துபோயிருந்தான். அவரது தெருக்கூத்து நாடகங்களை ஒருநாளும் பார்க்காமல் உறங்குபவன் அல்ல. ஆனால் இன்றோ பார்க்கும் வாய்ப்பை கைவிட வேண்டி இருந்தது அவன் படிப்புக்காக. அருணுக்கான காலேஜ் பட்டம் கனவுகளை மெய்ப்பித்து விடவேண்டும் என்பதில்தான், தன் அப்பா அயராது இந்த வயதிலும் உழைப்பதை அறிந்தவனாக இருந்தான்.

நாளைக்குள்ள காலேஜ் பீஸ் கட்டலனா எக்ஸாம் அட்டர்ன் பண்ண முடியாதுப்பா என்று அருண் சொன்னபோது செல்வத்துக்கு தன் கனவுகள் கலைந்துவிடுமோ என்ற பயம் எத்தனிக்க அழுகையே வந்துவிடும்போல் இருந்தது. கடந்தபோன இருபது வருட உழைப்பு வீணாகி விடுமோ என்று, அதற்குள்ளாக கர்ணனாக தான் வெளிப்படும் நேரம் வந்துவிட்டதை உணர்ந்து வில்லிலிருந்து எய்தப்படும் அம்பு போல வெளிவந்தார். அந்த நேரம் கர்ண மகாராஜாவாகவே வெளிப்பட்டார். முகத்தில் செந்துரத்தினால் பூசப்பட்டு விளக்கு வெளிச்சத்தில் மினுமினுப்பாக தோன்றினார். கம்பீரக் குரலில் நிஜ கர்ணனே தோற்கும்வண்ணம் வெளிப்பட்டார் செல்வகணபதி.

"அஞ்சை பஞ்சைகள்  பஞ்சம் பறந்தோட தானம் செய்தேன்
அஞ்சை பஞ்சைகள் பஞ்சம் பறந்தோட தானம் செய்தேன்
பறந்தோட தானம் செய்தேன்
பறந்தோட தானம் செய்தேன்
பாருங்கோ கீர்த்தி வடைத்தேன் 
தன கர்ணன் என்று"
என்ற பாடல் வரிகளால் தன் கதாபாத்திரத்தை வெளிப்படுத்திய செல்வகணபதிக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை, நாளை முதல் தன் மகன் அருண் காலேஜ்ஜில் படிக்க முடியாது போகுமே என்பது. இரவுகள் விடியல்களை நோக்கி நகருவதாய்தான் இந்த 58 வயதிலும் எண்ணுயிருந்தார் செல்வகணபதி.