Monday 24 September 2012

எனக்குள் யாரோ?


தின்வயதுக்கான வளர்ச்சிகளோடுதான் இருந்தான் வருண். ஆனாலும் மனதளவில் சின்னக் குழந்தைகளை ஒத்திருந்தது அவனுடைய பேச்சுத்தோரணையும் நடைமுறை யதார்த்தங்களும்... இதுவரையிலான அவனுடைய வாழ்வின் அசைவுகளை அந்த 18 வயது வருண் ஒருநாளும் அசைபோட்டவனாய் தெரியவில்லை. காரணம் தன்னை அவன் எப்போதும் ஒரு குழந்தையாகவே மனதுக்குள் வளர்த்துகொண்டான். இந்த பதின்வயது என்பது எல்லா இளசுகளுக்குமே ஒரு நெருக்கடியை தந்துவிட்டுதானே போகிறது. இந்த நெருக்கடியைத்தான் இப்போது வருணும் சந்திக்கிறான் அவனுக்குமேகூட தெரியாமல்...

அவனின் குடும்பம் என்றுமே ஒரு குழந்தையாகவே பார்த்துகொண்டுதான் இருந்தது. இன்றும் அதுவே நீடிக்கிறதுகூட. ஆனால் இந்த வயதிற்கான மாற்றங்கள் மெல்ல மெல்ல மேலெழ துவங்கியிருந்தது வருணுக்கு. ஆமாம் வீட்டுப் பொழுதுகளைவிட அதிக நேரங்கள் இப்போதெல்லாம் நண்பர்களோடுதான் பொழுதுகள் கழிகின்றன வருணுக்கு. எல்லாம் அவனின் வயதொத்த நண்பர்கள் வட்டம்தான். அவனுடைய நட்பு வட்டமே சற்று வித்தியாசமானது. ஆம் எல்லாருக்குமான நண்பர்களை காட்டிலும் இவனுக்கான நண்பர்கள் சற்று அதிகம்கூட. காரணம் வருணின் குறும்புத்தனமாக பேச்சுக்களும் சிறுபிள்ளை போன்ற விளையாட்டுச் செயல்களும். ஆனால் அத்தனை நண்பர்களிலும் வருணுக்கு மிகவும் பிடித்தவர்களாக ஒருசிலர் மட்டுமே இருந்தனர்.

அவர்கள் சொல்வதை அச்சுபிழறாமல் செய்து முடிப்பவனாய் மாறி இருந்தான் வருண் இப்போது. காரணம் இந்த பதின்வயது எதிர்பார்க்கும் பாசமும் அன்பும் வீட்டிற்கு வெளியிலும் தனக்கு மட்டும்தான் கிடைக்கிறது என்கிற வருணின் எண்ண அலைகள். இதுவரை இருந்த அவனுடைய செயல்களில் மெல்ல மெல்ல அவனின் நண்பர்களின் தலைதுக்கல்கள் ஆரம்பமானது இப்போது. வருணின் சில குணாதியங்களை மாற்றிக்கொள்ளுமாறு நண்பர்களின் ஒருவன் சொல்ல மறுப்பே தெரிவிக்காமல் மாறத் தொடங்கினான் வருண். காரணம் தனக்காகவே அவன் யோசிக்கிறான். தனக்காகவே உறங்குகிறான் விழிக்கிறான் என்கிற வருணின் சிந்தனை. இப்போது மற்றொரு நண்பனின் ஆசைக்காக இன்னுமொரு மாற்றம் தெரியத் தொடங்கியது வருணின் உடையில்.

அன்று வருணின் பிரியமான தோழி சொன்னாள், வருண் உனக்கு சில மாற்றங்கள் செய்யப்பட்டால் சும்மா மாடல் ஹீரோ மாதிரி இருப்படா என்று. உடனடியாக மாறிவிட்டான் வருண். அதிசயம்... அன்று முழுவதும் அவன்வீட்டு ஆளுயரக் கண்ணாடியில்தான் பொழுதைக் கழித்தான்.

நாட்கள் நகர்ந்தன... அவனுக்கான மாற்றங்கள் மெல்ல மெல்ல அவனே அறியாத ஒரு அழுத்தத்தை தர ஆரம்பித்திருந்தன... இப்போது அவன் தன்னுடைய குழந்தைதனத்தை தொலைத்திருந்ததை உற்று கவனிக்க தொடங்கியிருந்தான். மெல்ல சிந்திக்கவும் தொடங்கினான் நான் ஏன் இத்தனை மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டேன் என்று. ஆனால் இப்போது காலம் தாண்டிய யோசனையாகபட்டது அவனுடைய மனதுக்கு. இருந்தாலும் தன்னுடைய குழந்தைதனமாக சிரிப்பும் சிறுபிள்ளையான விளையாட்டும் தனக்கே தெரியாமல் தொலைந்திருந்ததை அவனால் கவனிக்க முடிந்தது.


மெல்ல மனதோடு அவனுக்கான போராட்டம் தொடங்கி இருந்தது இப்போது. அவனுக்கு பிடித்தமான அவனுடைய சிறுபிள்ளைத் தோரணையிலிருந்து தாண்டி வந்துவிட்டது போன்ற அழுத்தம் அவனுக்குள். இதனை மிக தாமதமாகவே அவனுக்கு தெரிந்திருந்தாலும் இந்த மாற்றங்களை அவனால் இப்போது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மருத்துவரை அணுக வேண்டிய அவசியம் இருக்கிறதோ என்கிற எண்ணம் தோன்ற ஒரு டாக்டரையும் பார்த்தான் வருண். அவரின் ஆலோசனைகள் அவனுக்கு அப்போது தேவைப்பட்டதுதான்.

காலங்கள் மாறின... மெதுவாக உருண்டன பொழுதுகள். அடைபட்டவனாக உணர்ந்த வருணுக்கு இப்போது பரவாயில்லை என்கிற எண்ணம் மேலெழுந்தது. மீண்டும் தன்னுடைய குழந்தைதனமாக விளையாட்டுக்களும் பேச்சு மொழிகளும் அவனுக்குள் நிறைவதை ரசிக்கத் தொடங்கினான். நமக்கான மாற்றங்களை இந்த உலகம் தீர்மானிக்கின்றன... ஆனால் நம்மை நாமாகவே பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ள முயல்வதில்லை. இப்போது தன்னை எந்த மாற்றத்திற்கும் உட்படுத்தாத நட்புக்களே போதும் என்கிற முடிவுக்கு வந்தவனான் வருண் இப்போது.

இந்த புதிய காலைப்பொழுது வருணின் கண்ணில்பட்டது இந்த வாசகங்கள்... யாருக்காகவும் உங்களை மாற்றிக்கொள்ளாதீர்கள்... மாற்றிக்கொள்ள ஆரம்பித்தால் உலகின் ஒவ்வொருவருக்காவும் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டி இருக்கலாம் என்று இருந்தது அந்த சுவற்று வாசகங்கள்.